டைபாய்டு எவ்வாறு பரவுகிறது மற்றும் அது குறித்து ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன?

டைபாய்டு அனைவரையும் பாதிக்கக்கூடிய ஒரு மோசமான நோய் ஆனால் மோசமான சுகாதார நடைமுறைகள் மற்றும் மாசு பட்ட உணவுப் பொருள் மற்றும் நீருக்கு வெளிப்படுத்தப்படுவதால் குழந்தைகள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாபவர்களாக இருக்கிறார்கள்.ஒரு பெற்றோராக, இந்த நோய் எவ்வாறு பரவுகிறது, அதை எவ்வாறு தடுப்பது, மற்றும் உங்கள் குழந்தைகளை அதிலிருந்து பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்திருப்பது மிகவும் முக்கியம்.இந்தக் கட்டுரையில், டைபாய்டு நோய், அதன் பரவல், தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
டைபாய்டு எவ்வாறு பரவுகிறது?
டைபாய்டு காய்ச்சல் சால்மோனல்லா டைஃபி என்ற ஒரு பாக்டீரியாவால் உருவாகிறது. பொதுவாக மாசுபட்ட உணவு அல்லது நீரை நாம் எடுத்துக் கொள்ளும் போது அந்த பாக்டீரியா வாய்வழியாக உடலுக்குள் செல்கிறது. உடலுக்குள் சென்றவுடன் சால்மோனல்லா டைஃபி நோய்கிருமித் தொற்று குடல் வழியே பயணித்து இரத்த ஓட்டத்தில் கலந்து பரவத் தொடங்குகிறது. உடல் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டு காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
டைபாய்டு நோயால் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடிய சில பொதுவான வழிகள் பின்வருமாறு:
- மாசுபட்ட நீரைப் பருகுவது
- சுகாதாரமற்ற தெருவோர உணவுகளை, குறிப்பாக குளிர்ந்த நிலையில் பரிமாறப்படும் (ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வெளியில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும்) பழங்கள், சாட், இனிப்புகள் அல்லது நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை உண்பது
- வடிகட்டாத அல்லது மாசுபட்ட நீரை பயன்படுத்தி உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் அல்லது ஐஸ் ‘கோலா’களை உட்கொள்வது
- தெருவோர வியாபாரிகள் விற்கும் பாதுகாப்பற்ற கரும்புச்சாறு அல்லது (ஐஸுடன் அல்லது ஐஸ் இல்லாமல்) பழச்சாறுகளை பருகுவது
கிரானிக் கேரியர்கள் (நீண்ட காலமாக நோய்க் கிருமிகளை உடலில் வைத்திருப்பவர்கள்) யார்?
சில சந்தர்ப்பங்களில் டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் குணமடைந்த பிறகும் நோய் நுண் கிருமிகளை எந்த ஒரு வெளிப்படையான அறிகுகுறிகளும் இல்லாமல் தங்கள் குடல் பாதையில் நீண்டநாட்களாக தக்கவைத்துக் கொண்டிருப்பார்கள். கிரானிக் கேரியர்கள் (நீண்ட காலமாக நோய்க் கிருமிகளை உடலில் வைத்திருப்பவர்கள்) என்று அறியப்படும் இத்தகைய தனி நபர்கள் பல ஆண்டுகளுக்கு இந்த நோய்க் கிருமியைப் பரவச் செய்து மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தக் கூடும். குறிபிடத்தக்க வகையில் தங்களை அறியாமலேயே தங்கள் சமூகத்தினரிடையே டைபாய்டு நோய் பரவும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.சுகாதாரமற்ற நிலையில் இத்தகைய நபர்கள் தயாரிக்கும் உணவை உண்ணுவதால் அல்லது பள்ளி போன்ற இடங்களில் இவர்களுடன் தொடர்பு கொள்ளும் குழந்தைகள் டைபாய்டு தொற்றுக்கு ஆளாகலாம்.
சுகாதாரமற்ற நிலையில் ஒரு கேரியர் தயாரித்த உணவை உட்கொண்டால் அல்லது பள்ளிகள் போன்ற இடங்களில் ஒரு நாள்பட்ட கேரியருடன் மறைமுகமாக தொடர்பு கொண்டால் குழந்தைகள் இந்த தொற்று நோயால் பாதிக்கப்படலாம்.
டைபாய்டு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்னென்ன?
- நாளுக்கு நாள் காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வரும் அது ஒரு சில வாரங்களுக்கு நீடிக்கக் கூடும்
- சோம்பேறித்தனம் மற்றும் சுறுசுறுப்பின்மை
- வாந்தி, வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல்
- இருமல்
- ஒரு சில அரிதான சந்தர்ப்பங்களில் ஒரு வெளிறிய சொறி மார்பில் தோன்றும்
உங்கள் குழந்தைக்கு இத்தகைய எந்த ஒரு அறிகுறியும் காணப்பட்டால் உடனே ஒரு மருத்துவரை கலந்தாலோசியுங்கள். சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால்,டைபாய்டு நீண்ட கால சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
டைபாய்டு ஒரு குழந்தையிலிருந்து மற்றொரு குழந்தைக்கு பரவுமா?
பெரும்பாலான தொற்றுநோய்களைப் போல் அல்லாமல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடித் தொடர்பு மூலம் பரவுவதில்லை. இருப்பினும் அது வேறு மறைமுகமான வழிகளில் பரவும். குறிப்பாக சுகாதாரமற்ற இடங்களில். உதாரணமாக நோயால் பாதிக்கப்பட்ட ஓர் குழந்தை கழிப்பறைக்கு சென்றுவிட்டு அவன் /அவள் கைகளைக் கழுவாமல் தன் சகோதர சகோதரிகளுடன் பரஸ்பரமாக கலந்துகொண்டால் அல்லது தங்களது கைகளை அவர்களது வாயில் வைக்க நேர்ந்தால் அல்லது கைகளை கழுவாமல் உணவு உண்டால் நோய்த் தொற்று அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
டைபாய்டு நோயைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
உங்கள் குழந்தை டைபாய்டு நோயால் பாதிக்கப்படாமல் தடுக்க நீங்கள் பின்வரும் சில எளிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:
- தொடர்ந்து முறையாயக கைகளை கழுவுதல் குறிப்பாக உணவு சமைப்பதற்கு, பரிமாறுவதற்கு அல்லது உண்ணுவதற்கு முன்பாக.
- கழிப்பறைக்கு சென்று திரும்பிய பிறகு எப்போதும் கைகளைக் கழுவ அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
- சுத்திகரிக்கப்படாத நீரை பருக்குவதை தவிர்க்கவும், வடிகட்டிய அல்லது கொதிக்கவைக்கப்பட்ட நீரை மட்டுமே பருக வேண்டும் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
- பழங்கள் மற்றும் காய்கறிகளை முறையாகக் கழுவுங்கள் மற்றும் உங்கள் அனைத்து உணவுகளையும் முழுமையாக சமையுங்கள்.
- அவர்கள் வெளியே உண்ணவேண்டியிருந்தால் சமைக்கப்படாத உணவை உண்ணவேண்டாம். ஆரஞ்சு அல்லது வாழைப்பழம் போன்ற மேல்தோலை உரிக்கக் கூடிய பழங்களை மட்டுமே உண்ணுங்கள் அல்லது புதிதாக சமைக்கப்பட்ட மற்றும் சூடான உணவுப் பொருட்களை மட்டுமே உண்ணச் சொல்லுங்கள்.
- தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கருத்தில் கொள்ளுங்கள் ஏனென்றால் இந்த நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள அதுவே மிகச் சிறந்த வழி.
டைபாய்டு தடுப்பூசி என்னையும் என் குடும்பத்தினரையும் எவ்வாறு பாதுகாக்கும்?
டைபாய்டு நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வதே மிகச் சிறந்த ஒரு வழி.. டைபாய்டு நோயிலிருந்து மீண்ட நோயாளிகளும் மீண்டும் நோயால் பாதிக்கப்படும் ஆபத்தை கொண்டிருப்பார்கள். இயற்கையான நோய்த் தொற்று டைபாய்டு நோய்க்கான எதிர்ப்பு சக்தியை நீண்ட காலத்துக்கு போதுமான அளவு கொடுப்பதில்லை. நீங்கள் ஏற்கனவே டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்திருந்தாலும், டைபாய்டு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நீண்டகால நோய்க் கிருமி கேரியர்களிடமிருந்தும் அது உங்களை பாதுகாக்கும் மற்றும் பெரும் நோய்தோற்றுப் பரவல்களில் இருந்தும் உங்களை பாதுகாக்க உதவும்
டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குணமடைந்த பின்னர் 4 முதல் 6 வாரங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்.
முடிவுரை
மாசுபட்ட உணவு மற்றும் நீர் மூலமாக பரவும் டைபாய்டு தீவிரமான நோய் என்றாலும் அது தவிர்க்கக் கூடிய ஒரு நோயாகும். அது எவ்வாறு பரவுகிறது என்பதை புரிந்து கொள்வதன் மூலமும் மற்றும் நல்ல சுகாதார பழக்கத்தை கடைப்பிடித்தல், பாதுகாப்பான உணவு மற்றும் நீரை உட்கொள்ளுதல் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்ற நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொள்வதன் மூலமும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் டைபாய்டு நோயால் பாதிக்கப்படும் ஆபத்தைக் குறைக்கலாம். டைபாய்டு நோய் நீண்டகால சிக்கல்களை உருவாக்கும் என்பதாலும், நீண்ட கால நோய்க் கிருமி கேரியர்கள் தங்களை அறியாமல் பேக்டீரியாக்களைப் பரப்பக் கூடும் என்பதாலும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். டைபாய்டு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், அதனால் மீண்டும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் உங்கள் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதே மிகச் சிறந்த ஒரு வழியாகும்.
மூலாதாரங்கள்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள உள்ளடக்கங்கள், டைபாய்டு நோய் குறித்த பொது தகவல்களை வழங்கும் நோக்கத்துக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதை ஒரு மருத்துவ ஆலோசனையாக கருதக்கூடாது. ஒரு மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு இருக்கக்கூடிய எந்த ஒரு கேள்விகள் தொடர்பாகவும் எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்கதவறாதீர்கள்.