அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அறிகுறிகள்
டைபாய்டு காய்ச்சலுக்கான வழக்கமான அறிகுறிகள் என்னென்ன?
டைபாய்டு இன் மிகவும் பொதுவான அறிகுறிகளில், இடைவிடாத காய்ச்சலுடன் சேர்ந்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உடல் வெப்பம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கும் மற்றும் தலைவலி, மிக அதிகமான களைப்பு, வயிற்று வலி மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகள் காணப்படும்.[1]
நோய் தோற்றுக்குப் பிறகு எவ்வளவு சீக்கிரம் இந்த அறிகுறிகள் தோன்றும் ?
டைபாய்டு பாதிக்கப்பட்ட நபருக்கான நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு சுமார் 7 இல் இருந்து 14 நாட்கள் வரை பிடிக்கும். இருப்பினும் சில சந்தர்ப்பங்களில், டைபாய்டு நோய் அறிகுறிகள் மிகவும் சீக்கிரமாக 3 நாட்களிலேயே தோன்றலாம் அல்லது கிட்டத்தட்ட 2 மாதகாலம் வரை ஆகலாம்.[2]
டைபாய்டு காய்ச்சல் நீண்ட கால உடல் ஆரோக்கியப் பிரச்சினைகளை தோற்றுவிக்குமா?
சிகிச்சை அளிக்கப்படாமலிருந்தால் அது குடலில் இரத்தக் கசிவு அல்லது ஓட்டை உட்பட பல தீவிரமான உடல் ஆரோக்கியப் பிரச்சினைகளை ஏற்ப்படுத்தக் கூடும். ஒரு சில தீவிரமான பாதிப்புக்களில் அது மூளை உட்பட இதர உடல் உறுப்புக்களையும் பாதிக்கக் கூடும்.[3,4]
டைபாய்டு காய்ச்சலும் உணவு நச்சுத்தன்மையும் ஒன்றா?
டைபாய்டு காய்ச்சல் சால்மோனெல்லா டைஃபி (Salmonella typhi) என்ற ஒரு வகை நுண்கிருமியால் ஏற்படுகிறது அது உணவு மூலமாக பரவக் கூடும், ஆனாலும் இது உணவு நஞ்சு பாதிப்பு போன்ற ஒன்று அல்ல. டைபாய்டு காய்ச்சலும் உணவு நச்சுத்தன்மையும் ஒன்றா? உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சாதியக்கூறுள்ள ஒரு நோயாகும் அதற்கு சரியான நேரத்தில் ஆன்டிமைக்ரோபியல் மருந்துகள் மூலம் உடனடியாக முறையாக சிகிச்சை அளித்து WASH நெறிமுறைகளைப் பின்பற்றுவது மற்றும் டைபாய்டு தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் தடுக்கலாம் ஆனால் உணவு நஞ்சு பாதிப்பு அவ்வாறு அல்ல அது பொதுவாக ஒரு வார காலத்துக்குள் குணமாகிவிடும்.[5,6]
டைபாய்டு நோய்க்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் என்னென்ன சிக்கல்கள் எழக்கூடும்?
சரியான நேரத்தில் தலையீடு மற்றும் முறையான சிகிச்சையின் மூலம், டைபாய்டு காய்ச்சல் ஒரு வாரத்திற்குள் முன்னேற்றம் காணலாம். இருப்பினும், சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், அதன் அறிகுறிகள் தீவிரமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிகிச்சை அளிக்காமல் விடப்படும் நோயாளிகளுக்கு காய்ச்சலிலிருந்து முழுமையாக குணமடைய வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.[1]
எனக்கு டைபாய்டு நோய் இருப்பதாக சந்தேகப்பட்டால் நான் எப்போது ஒரு மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும் ?
உங்களுக்கு டைபாய்டு காய்ச்சல் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்த உடனே ஒரு மருத்துவரை கலந்தாலோசியுங்கள். அத்தகைய அறிகுறிகள் இடைவிடாது இருந்தாலோ அல்லது மோசமடையத் தொடங்கினாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவை இருக்கும்.[7,8]
நோய் தடுப்பு
டைபாய்டு நோய் வராமல் நான் தடுக்க முடியும்?
உங்கள் கைகளை அடிக்கடி கழுவுவது மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஒரு நல்ல சுகாதாரமான பழக்கவழக்கங்களை பராமரித்தாலே டைபாய்டு நோய் பாதிக்காமல் உங்களால் தடுக்கமுடியும். எந்த ஒரு தடுப்பூசி உங்களுக்கு சிறப்பானது என்பது குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.
டைபாய்டு பாதிப்பை தடுப்பதில் கை கழுவுவது ஏன் மிக முக்கியம்?
குறிப்பாக கழிவறையை பயன்படுத்திய பிறகு அல்லது உணவருந்தும் முன் சோப் பயன்படுத்தி, முறையாக நமது கைகளை கழுவாவிட்டால் நாம் தொடும் பொருட்களிலிருந்து நமது கைகளில் தொற்றிக்கொண்ட டைபாய்டு நோய்க் கிருமிகள் எளிதாக நமது வாய்வழி உட்சென்றுவிடும் அல்லது அடுத்தவர்களுக்கு பரவக்கூடும்.[9]
வடிகட்டப்படாத நீரை பருகுவதன் மூலம் எனக்கு டைபாய்டு வரும் வாய்ப்பு இருக்கிறதா?
ஆம். வடிகட்டப்படாத அல்லது சால்மோனெல்லா டைஃபி நோய்க்கிருமியால் மாசுபட்ட நீரை பருகுவது டைபாய்டு நோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.[5]
டைபாய்டு நோய் வராமல் தடுக்க வீட்டில் நான் என்ன வகையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்?
டைபாய்டு நோய் வராமல் தடுக்க வீட்டில் பின்வரும் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும்:
- சோப் கலந்த சூடான நீரில் உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள்.
- சுத்திகரிக்கப்படாத / வடிகட்டப்படாத நீரை பருகுவதை தவிருங்கள்.
- உங்கள் அனைத்து உணவுப் பொருட்களும் நன்றாக முழுமையாக சமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள்.
- மேல் தோலை உரிக்க முடியாத அல்லது முறையாக கழுவப்படாத பழங்கள் அல்லது காய்கறிகளை நேரடியாக அப்படியே உண்ணுவதை தவிருங்கள்.
- உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.[10]
டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபருடனான சாதாரண தொடர்புகளின் மூலம் நோய் பரவும் வாய்ப்பு உள்ளதா?
இல்லை, நோய்த் தொற்றுள்ள நபருடன் நேரடியான அல்லது சாதாரணமான தொடர்பு நடவடிக்கைகள் மூலம் டைபாய்டு காய்ச்சல் பரவுவதில்லை. ஆனால் அவர்கள் தொடும் எந்த ஒரு பொருட்களை குறிப்பாக அவர்கள் தங்கள் கைகளை முறையாக கழுவாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில், அந்தப் பொருட்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ள நேர்ந்தால் உங்களுக்கும் டைபாய்டு நோய் தொற்றிக்கொள்ளும் ஆபத்து அதிகம்.[11]
டைபாய்டு நோய் தொற்றை குறைப்பதற்கான முறையான சுகாதார நடைமுறைகள் எவ்வாறு உதவும்?
டைபாய்டு நோயை விளைவிக்கும் நோய்க்கிருமி மனித மலம் மற்றும் சிறுநீர் மூலமாகப் பரவுகிறது. சில சமயங்களில் நோய்கிருமி தொற்று இருக்கும் மனிதக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட, சுத்தம் செய்யப்படாத சுகாதாரமற்ற பகுதிகளில் நீர் மாசுபடும் வாய்ப்பு உள்ளது. இந்த நீரை பருகும் அல்லது இந்த நீரால் கழுவப்பட்ட உணவுப் பொருட்களை உண்ணும் மக்களுக்கு டைபாய்டு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.[5]
டைபாய்டு நோயைத் தடுப்பதில் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் என்ன பங்கு வகிக்கிறது?
சால்மோனெல்லா டைஃபி கிருமிகள் உணவு அல்லது நீரின் மூலமாகப் பரவும் என்பதால் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம். நீங்கள் பின்பற்றவேண்டிய சில நடைமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:[11]
- நீங்கள் டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அடுத்தவர்களுக்காக நீங்கள் சமைக்கக் கூடாது.
- சமைப்பதற்கு, உணவு பரிமாறுவதற்கு அல்லது உணவு உண்பதற்கு முன்பும் மற்றும் பின்பும் உங்கள் கைகளை முழுமையாக நன்றாகக் கழுவுங்கள்.
- உணவு தயாரிக்கும் முன்பும் மற்றும் தயாரித்து முடித்த பிறகும் அனைத்து சமையல் மேற்பரப்புக்கள் மற்றும் பாத்திரங்களை முழுமையாக நன்றாகக் கழுவுங்கள்.
- பயணத்தின் போது சுகாதார வரையறைகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், குறிப்பாக உணவுகள் குறித்தவற்றில் சந்தேகம் இருந்தால் அத்தகைய சந்தர்ப்பங்களில் அதிக வெப்ப நிலையில் சமைக்கப்பட்ட உணவு அல்லது பேக் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
- சுத்திகரிக்கப்படாத நீர் அல்லது ஐஸ் கட்டிகள் பயன்படுத்தப்பட்ட குளிர் பானங்களை அருந்தாதீர்கள்.
- உறுதியாக தெரியவில்லை என்றால், கொதிக்க வைத்த அல்லது பாட்டில் தண்ணீரைக் குடிப்பது பாதுகாப்பானது.
நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை
டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு எவ்வாறு கண்டறியப்படுகிறது ?
உங்கள் இரத்தம், மலம், சிறுநீர் அல்லது எலும்பு மஜ்ஜை மாதிரிகளை சோதனை செய்வதன் மூலம் டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படுகிறது.[12]
டைபாய்டு காய்ச்சலுக்கு பொதுவாக என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன?
டைபாய்டு காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் மிகவும் பொதுவான ஒன்று உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட கால அளவுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து. முறையான சிகிச்சை மூலம் ஒரு சில நாட்களிலேயே நோய் அறிகுறிகள் குறையத் தொடங்கி முன்னேற்றம் காணப்படும். நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே, நன்றாக உண்ணுவது ஓய்வெடுப்பது மற்றும் அதிகளவில் திரவங்களை எடுத்துக் கொள்வது போன்றவற்றை உறுதி செய்யவேண்டும்.[13] டைபாய்டு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க இன்றே தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.
டைபாய்டு நோயிலிருந்து குணமடைந்து நலம் பெற நான் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டுமா?
ஆம், டைபாய்டு நோயிலிருந்து குணமடைய நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் அவசியம். பெரும்பாலான மக்கள் 10 இல் இருந்து 14 நாட்களுக்கு தொடர்ந்து முழு கால அளவுக்கும் மருந்து எடுத்துக் கொள்ளவேண்டிய தேவை இருக்கும். நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தை எடுத்துக் கொள்ளத்தொடங்கி 6 இல் இருந்து 7 நாட்களில் நோய் அறிகுறிகள் குறைந்து முன்னேற்றம் காணப்படும் என்றாலும், உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த கால அளவு முழுவதும் நீங்கள் மருந்தை எடுத்துக் கொண்டு நிறைவு செய்வது மிகவும் முக்கியம்.[13]
டைபாய்டு நோயிலிருந்து முழுமையாக குணமடைய எவ்வளவு நாட்கள் ஆகும்?
டைபாய்டு நோய்க்கான சிகிச்சையை நீங்கள் மேற்கொள்ளத்தொடங்கிய பிறகு ஒரு சில நாட்களிலேயே நீங்கள் சிறப்பாக இருப்பதாக உணரத் தொடங்குவீர்கள். நோயிலிருந்து முழுமையாக குணம் பெற்றதை நீங்கள் உணர 10 நாட்கள் வரை ஆகும், ஆனால் நோய் காரணமான களைப்பு மற்றும் வலுவின்மையிலிருந்து மீண்டுவர மேலும் சிறிது காலம் பிடிக்கும். இருப்பினும் உங்களுக்கு வேறு ஏதாவது சிக்கல்கள் இருந்தாலோ அல்லது நோய்த் தொற்று மீண்டும் ஏற்ப்பட்டாலோ குணமடைய அதிக காலம் பிடிக்கும். [11]
டைபாய்டு நோய்க்கு வீட்டிலிருந்தே சிகிச்சை பெற முடியுமா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டிய தேவை இருக்குமா?
டைபாய்டு நோய் பாதிப்பு தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டுவிட்டால் வீட்டிலிருந்தே நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளலாம் ஆனால் நோய் அறிகுறிகள் தீவிரமாகவோ அல்லது அதில் சிக்கல்கள் காணப்பட்டாலோ நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டிய தேவை இருக்கும்.[13]
டைபாய்டு நோயிலிருந்து குணமடைய நான் என்ன உணவு அல்லது பானங்களை எடுத்துக் கொள்ளவேண்டும் ?
டைபாய்டு நோயிலிருந்து குணமடைய வழக்கமான உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டு அதிகளவில் நீர் பருக்குவது மிகவும் முக்கியம். ஒரு நாளில் 3 பெரிய அளவு உணவை எடுத்துக் கொள்வதை விட நாள் முழுவது சிறிது சிறிதாக பல முறை உணவை எடுத்துக் கொள்ளலாம். புதிதாக சமைக்கப்பட்ட மற்றும் சூடாகப் பரிமாறப்படும் உணவுகளையே எடுத்துக் கொள்ளுங்கள். சமைக்கப்படாத அல்லது அறை வெப்பத்தில் இருக்கும் எந்த ஒரு உணவையும் எடுத்துக் கொள்வதைத் தவிருங்கள்.[10,13]
தடுப்பூசி
தற்போது இருக்கக் கூடிய பல்வேறு வகை டைபாய்டு தடுப்பூசிகள் என்னென்ன?
இரண்டு வகையான தடுப்பூசிகள் இருக்கின்றன: [14]
- டைபாய்டு காஞ்சுகேட் வேக்ஸின்(TCV)
- Vi பாலிசாக்கரைடு(Vi-PS)
டைபாய்டு தடுப்பூசி பாதுகாப்பு எவ்வளவு காலம் செயல்திறன் கொண்டதாக நீடித்திருக்கும்?
பல்வேறு வகையான தடுப்பூசிகளின் பல்வேறு வகை பாதுகாப்புத் திறனளவு இருக்கும். WHO கூற்றுப்படி டைபாய்டு நோயை தடுப்பதில் அனைத்து வயதினருக்கும் TCV பொருத்தமானதாக கருதப்படுகிறது ஏனென்றால், அது சிறு வயது குழந்தைகளுக்கு பொருத்தமானதாக இருக்கிறது மற்றும் எதிர்பார்க்கப்பட்ட அளவு நீண்ட நாள் பாதுகாப்பு வழங்குவதாகவும் இருக்கிறது.[14]
டைபாய்டு தடுப்பூசி குறித்து மேலும் தெரிந்து கொள்ள, இங்கு படிக்கலாம்.
டைபாய்டு தடுப்பூசிக்கு ஏதாவது பக்க விளைவுகள் இருக்கிறதா?
தடுப்பூசி காரணமான எந்த ஒரு தீவிரமான பக்கவிளைவுகள் இல்லை என்ற போதிலும் காய்ச்சல், ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் வலி மற்றும் வீக்கத்தை ஒரு சில மக்கள் அனுபவிக்கிறார்கள்.[15]
டைபாய்டு தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா?
TCV தடுப்பூசி 6 மாத இளம் வயது குழந்தைகளுக்கும் செலுத்தக்கூடியது என்பதால் அது குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான ஒன்று என்று கருதப்படுகிறது. Vi-PS தடுப்பூசி 2 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு செலுத்தலாம்.[15]
டைபாய்டு தடுப்பூசியை நான் எங்கு செலுத்திக் கொள்ளலாம்?
டைபாய்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள இன்றே உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.
பயணத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
டைபாய்டு நோய் தொற்று பரவலாக உள்ள பகுதிகளுக்கு பயணப்படும் போது நான் எந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்?
பயணத்தின் போது குறிப்பாக கழுவ முடியாது அல்லது மேல் தோல் உரிக்க இயலாத பச்சையான பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிருங்கள். பாதுகாப்பாற்ற கடல் உணவு, பச்சை முட்டைகள், மற்றும் காய்ச்சி பதப்படுத்தப்படாத பால் உணவுகளை தவிருங்கள். வடிகட்டப்படாத நீரை பருக்காதீர்கள். மற்றும் ஐஸ் இல்லாத பானங்களை மட்டுமே கேட்டுப் பருகுங்கள்.[10]
பயணத்தின் போது பருகுவதற்கான பாதுகாப்பான நீரை நான் எவ்வாறு உறுதி செய்வது?
பயணத்தின் போது கொதிக்க வைக்கப்பட்ட அல்லது பாட்டிலில் அடைக்கப்பட்ட அல்லது மினரல் வாட்டரை பருகுங்கள்.[10]
பயணத்தின் போது தெரு ஓரக் கடைகளில் உணவு உண்ணுவது பாதுகாப்பானதா?
பயணத்தின் போது சாலையோரக் கடைகளில் உணவருந்துவதை தவிர்ப்பது நல்லது. இருப்பினும் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் புதிதாக சமைக்கப்பட்ட ஆவி பறக்கும் சூடான உணவை தேர்ந்தெடுங்கள், குளிர்ந்த அல்லது பச்சை உணவுகளை தேர்வு செய்வதை தவிருங்கள்.[10]
என் பயணத்தின் பொது என்னென்ன சுகாதார நடைமுறைகளை நான் பின்பற்றவேண்டும்?
உங்கள் கைகளை அடிக்கடி கழுவுவதை உறுதி செய்யுங்கள். உங்களுடன் சோப்பை எடுத்துச் செல்லுங்கள், மற்றும் கழிவறையை பயன்படுத்திய பின்னரும் உணவருந்துவதற்கு முன்பாகவும் உங்கள் கைகளை கழுவுங்கள். உங்களிடம் சோப் எதுவும் இல்லை என்றால் அதற்குப் பதிலாக ஒரு ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசரைப் பயன்படுத்தலாம்.[10]
என் பயணத்தின் இடையில் டைபாய்டு நோய் அறிகுறிகள் எனக்குத் தோன்றினால் நான் என்ன செய்யவேண்டும்?
பயணத்தின் போது நீங்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு டைபாய்டு நோய் அறிகுறிகள் தோன்றுமானால் நீங்கள் ஏற்கனவே டைபாய்டு தடுப்பூசி எடுத்திருந்தாலும் அதை பொருட்படுத்தாது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஒரு மருத்துவரை கலந்தாலோசியுங்கள்.[1]
என் பயணம் நிறைவடைந்த பிறகு டைபாய்டு நோய் தொற்று இல்லாமல் என் வீட்டுக்கு நான் எவ்வாறு செல்ல முடியும் ?
உங்கள் பயணம் நிறைவடைந்த பிறகு உங்கள் வீட்டுக்கு டைபாய்டு நோய் தொற்று இல்லாமல் செல்வதற்கு தனிநபர் சுகாதார வரையறைகளை நல்ல முறையில் சிறப்பாகப் பாராமரிப்பதை உறுதி செய்யுங்கள். தொடர்ந்து முறையாக உங்கள் கைகளை கழுவுங்கள், பச்சையான அல்லது சமைக்கப்படாத உணவுகளை உண்பது மற்றும் வடிகட்டப்படாத நீரில் தயாரிக்கப்பட்ட பானங்களை பருகுவது போன்ற வற்றை தவிருங்கள். சுகாதாரம் மற்றும் துப்புரவு பராமரிப்பு குறைவாக உள்ள பகுதிகளுக்கு நீங்கள் பயணப்படவேண்டிய சந்தர்ப்பங்களில் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.[13,10, 16]
மூலாதாரங்கள்
- https://www.nhs.uk/conditions/typhoid-fever/symptoms/
- https://www.emro.who.int/health-topics/typhoid-fever/introduction.html
- https://www.nhs.uk/conditions/typhoid-fever/complications/
- https://www.mayoclinic.org/diseases-conditions/typhoid-fever/symptoms-causes/syc-20378661
- https://www.nhs.uk/conditions/typhoid-fever/causes/
- https://www.nhs.uk/conditions/food-poisoning/
- https://www.mayoclinic.org/diseases-conditions/typhoid-fever/symptoms-causes/syc-20378661#when-to-see-a-doctor
- https://www.nhs.uk/conditions/typhoid-fever/treatment/
- https://www.mayoclinic.org/diseases-conditions/typhoid-fever/symptoms-causes/syc-20378661#causes
- https://www.mayoclinic.org/diseases-conditions/typhoid-fever/symptoms-causes/syc-20378661#prevention
- https://my.clevelandclinic.org/health/diseases/17730-typhoid-fever
- https://www.mayoclinic.org/diseases-conditions/typhoid-fever/diagnosis-treatment/drc-20378665
- https://www.nhs.uk/conditions/typhoid-fever/treatment/
- https://www.who.int/teams/immunization-vaccines-and-biologicals/diseases/typhoid
- https://www.who.int/groups/global-advisory-committee-on-vaccine-safety/topics/typhoid-vaccines
- https://www.nhs.uk/conditions/typhoid-fever/vaccination/
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள உள்ளடக்கங்கள், டைபாய்டு நோய் குறித்த பொது தகவல்களை வழங்கும் நோக்கத்துக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதை ஒரு மருத்துவ ஆலோசனையாக கருதக்கூடாது. ஒரு மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு இருக்கக்கூடிய எந்த ஒரு கேள்விகள் தொடர்பாகவும் எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்கதவறாதீர்கள்.